வேதாரண்யத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மேலும் ஒரு தமிழக மீனவரை சிறிலங்காவின் சிங்கள இனவெறி கடற்படை கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளது.
இந்த ஆண்டு பிறந்து இது இரண்டாவது மீனவர் படுகொலையாகும். கடந்த 12ஆம் தேதிதான், புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர் வீரபாண்டியன் (வயது 19) சிறிலங்க கடற்படையினரால் கச்சத் தீவு கடற்பரப்பில் கொல்லப்பட்டார். சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அந்த கொடுஞ்செயலிற்கு எந்த நீதியும் இல்லை என்று இந்தியாவின் அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவிற்கான சிறிலங்க தூதர் பிரசாத் கரியவாசத்தை அழைத்து கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, அந்தச் சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மீனவர் வீரபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்க அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் மீது இந்திய அரசு மேல் விசாரணை நடத்த முற்படாத நிலையில், நேற்று முன் தினம் இரவு மேலும் ஒரு மீனவர் சிறிலங்க கடற்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் வினோதம் என்னவென்றால், வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட அன்று காலைதான், கடலோர காவற்படையின் கிழக்குப் பிரிவு தலைமைப் பொறுப்பேற்றுள்ள சர்மா, தமிழக முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இதற்குமேல் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாமல் பாதுகாப்பளிப்போம் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றார். அன்று மாலை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்தச் செய்தி வந்த அதே இரவில் இந்தக் கொடூரமான படுகொலையை சிறிலங்க கடற்படை நிகழ்த்தியுள்ளது. இதையும் தங்கள் கடற்படை செய்யவில்லை என்று மறுத்துள்ளார் சிறிலங்க தூதர் பிரசாத் கரியவாசம்!
இது எப்படி நடக்க முடியும்? இந்தியாவைப போன்ற ஒரு வல்லரசின் மீனவர் ஒருவர் தனது நாட்டின் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அண்டை நாட்டு கடற்படையால் சுட்டுக் கொல்வது இன்று நேற்றல்ல, 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறதே, எப்படி? இலங்கையைப் போன்ற ஒரு சுண்டைக்காய் நாட்டின் கடற்படையால் - உருப்படியாக ஒரு கடலோர கண்காணிப்பு கப்பல் கூட இல்லாமல் இருந்த அந்த நாட்டிற்கு, இந்தியாதான் இரண்டு கண்காணிப்பு கப்பல்களை 'நட்புடன்' அளித்தது. ஆனால் தனது நாட்டை நட்பு நாடு என்று கூறும் ஒரு பெரும் நாட்டின் மீனவரை துப்பாக்கியால் சுட்டும், சித்ரவதை செய்தும் கொல்ல அந்த நாட்டிற்கு எங்கிருந்து துணிவு வருகிறது?
எப்போதெல்லாம் இந்திய அரசு விளக்கம் கேட்கிறதோ, அப்போதெல்லாம் "எங்கள் கடற்படை சம்பவம் நடந்த அந்தப் பகுதிக்கு செல்லவேயில்லை" என்று சிறிலங்க கடற்படை கூறும். ஆயினும் அந்தச் சம்பவத்திற்கு காரணம் யார் என்று விசாரணை நடத்தப்போவதாக சிறிலங்க அரசும் கூறும். அதைத்தான் இப்போதும் கூறியுள்ளது. இவ்வாறு சிறிலங்க கடற்படையும், சிறிலங்க அரசும் கூறும்போதெல்லாம் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் இந்திய அரசு அமைதி காக்கும். இதுதான் நடந்து வருகிறது.
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1101/24/1110124036_1.htm
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment