இந்த "சீடி'க்களை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட "சீடி'யில் மத்திய, மாநில அரசை கடுமையாக தாக்கி வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 10ம் தேதி ம.தி.மு.க., தலைமை அலுவலகமான தாயகத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் தலைவர்கள் சிலர் ரகசியமாக வந்தனர். அவர்கள் எதற்காக அழைக்கப்பட்டனர் என்ற தகவலை வைகோ கடைசி நிமிடம் வரை தெரிவிக்கவில்லை. அனைவரையும் கட்சி அலுவலகத்தில் உள்ள மாடி அறைக்கு வைகோ அழைத்துச் சென்றார்.
அந்த அறைக்குள் இருந்த அனைத்து விளக்குகளும் திடீரென அணைக்கப்பட்டன. பெரிய "டிவி'யில் "சீடி' ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த "சீடி'யை அனைவரும் அமைதியாக பார்த்தனர். அரை மணி நேரம் அந்த "சீடி' காட்சி ஒளிபரப்பான பின், விளக்குகள் எரிய வைக்கப்பட்டன. "சீடி'யை பார்த்த வைகோ உள்ளிட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் வடிந்தது. வீட்டிற்கு புறப்பட்ட அவர்களிடம், தனித்தனியாக "சீடி'க்களை வைகோ வழங்கினார்.
"சீடி'யில் இடம் பெற்ற காட்சிகள் குறித்து ம.தி.மு.க., பிரமுகர் கூறியதாவது: "ஈழத்தின் இனகொலை இதயத்தின் ரத்தம்' என்ற தலைப்பில் வைகோ "சீடி' தயாரித்துள்ளார். இந்த "சீடி'யில் உரையாக்கம், இயக்கம், வெளியீடு என வைகோவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீபண்டார நாயக்கா, சாஸ்திரி ஒப்பந்தத்தில், பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை அகற்றப்பட்ட சம்பவம் முதல் இலங்கைத் தமிழர்களின் ஆதரவு "டிவி'யில் பணிபுரிந்து வந்த இசைபிரியாவை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த காட்சிகள் வரை இடம் பெற்றுள்ளன.
இலங்கை ராணுவம் குண்டு வீசியதில், செஞ்சோலையில் குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது, கர்ப்பிணி பெண்களின் வயிற்றிலிருந்து சிசுக்களை வெளியே அகற்றுவது, இந்திய ராணுவம், சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்வது போன்ற காட்சிகளும், இலங்கை தமிழர்களுக்காக ஜெனீவா நாட்டில் வைகோ உரையாற்றியதும், இலங்கை போரில் கெமிக்கல் குண்டுகள் வீசிய காட்சிகளும் உள்ளன.
லண்டனுக்கு சென்ற இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து வீதியில் போராட்டம் நடத்த வேண்டும் என, லண்டன் தமிழ் வானொலியில் வைகோ நேரலையில் பேசியபோது, அவரது ஆவேச உரையை கேட்டு லண்டன் வாழ் தமிழர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியே வந்து போராட்ட களத்தில் குதித்த காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் சண்டையிடுவது போன்ற காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசுக்கு, காங்கிரஸ் தலைவர்கள் மறைமுகமாக உதவி செய்ததையும், முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக தாக்கும் வசனங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த "சீடி'யினால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்ற காரணத்திற்காக தான், வைகோவே அதற்கான பொறுப்புகளை ஏற்று "சிடி'யை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர்கள் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறியதாவது: இந்திய மண்ணில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ரகசியமாக, "சீடி' வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
யோகேஸ்வரன், முகுந்தன், ஸ்ரீசபாரத்தினம், பத்மநாபன் போன்றவர்களை கொன்று குவித்தவர்கள் விடுதலைப் புலிகள். இலங்கைத் தமிழர்களின் உரிமையை பெற்றுத்தர போராடிய ராஜிவை கொன்ற விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தேச துரோகம். உடனடியாக இந்த "சிடி'க்களை பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வைகோ கோரிக்கை : உலகமெல்லாம் வாழும் தமிழ் சொந்தங்களே உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்குறுந்தகட்டினை பதிவு எடுத்து தமிழர் இல்லந்தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள் அதுவே நம் இனத்திற்கு நாம் ஆற்றும் தலையாய கடமையாகும்.
--You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment