Monday, May 9, 2011

[கனடா தமிழ் Canada Tamil] ஐநா நிபுணர்குழு அறிக்கை குறித்து எரிச்சல் கொள்வதற்குப் பதிலாக சிறிலங்கா தனது நடவடிக்கைகளை சீர்செய்து கொள்வது நல்லது!- கேணல் ஹரிகரன்


ஈழம் போரின் இறுதிக் கட்டங்களில் இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகம் பான்கீ-மூன் இற்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்ட மூவர் கொண்ட ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கையானது, எதிர்பார்க்கப்பட்ட மாதிரியே, இரு விதங்களிலான பதில் வினைகளை உருவாக்கி விட்டிருக்கிறது.

ஏப்ரல் 25ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலே சிறிலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் எதிரான பல குற்றச்சாட்டுகள் 'நம்பத்தகுந்தவை'யாக இருப்பதை நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

இந்த குற்றங்களை சிறிலங்கா அரசு புரிந்ததாக குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தவர்களுடைய சந்தேகங்களை இது மெய்ப்பித்திருக்கிறது.

இவர்களிலே, மேற்குலகின் பல மிதவாத அரசுகள், சர்வதேச அரசு சார்பற்ற அமைப்புகள், தமிழ் புலம்பெயர்ந்தவர்கள், சிறிலங்காவின் உள்ளேயும் வெளியேயும் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் செயலிழந்து போய்விட்ட அமைப்புக்கு மீள உயிரூட்ட இன்னமும் முயன்று கொண்டிருக்கும் புலிகளின் எச்ச சொச்ச உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

(நான் இவர்களுள் இந்தியாவையோ தமிழ் நாட்டையோ சேர்க்காமல் விட்டுவிட்டேன் என்பதை எவரும் கவனிக்கலாம். சிறிலங்காவைப் போலல்லாமல, இந்த இடங்களில் இந்த விடயம் உள்ளக அரசியலிலும் தேசிய அரசியலிலும் இரக்கமில்லாத முறையில் சேறு பூசுவதாக இருப்பதால் மனப்போக்குகள் திட்டமாக உருவாகவில்லை)

எனினும் வேறுபாடுகள் நிறைந்த இந்த பிரிவினருக்கு, பொதுவான ஒரு வேலைத்திட்டமோ அல்லது கூட்டுசெயற்பாட்டுக்கான தளமோ கிடையாது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதில் உள்ள தரப்பினரிடையே பலத்த கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள், ஐநா பாதுகாப்புச் சபையில் இதனை விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்று இராஐதந்திர அழுத்தம் கொடுப்பதிலிருந்து போர்க்குற்றங்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் நிறுத்துவது வரையானவையாக இருக்கின்றன.

மறுவளமாக அரசியல் தலைவர்களில் அனேகமானோர், ஊடகத்துறையினர் மற்றும் மக்கள் உள்ளிட்ட பல சிறிலங்கா மக்கள் இவ்வறிக்கையால் தாங்கள் அவமானப்படுத்தப் படுத்தப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள். போரின் போதான தமது அரசின் செயற்பாடுகள், கைக்கொள்ளப்பட்ட வழிகள் எப்படி இருந்தாலும் அவை புலிகளின் பயங்கரவாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததால் அவை நியாயப்படுத்தப்பட்டிருப்பதாக அவர்கள் நம்புவதே இதற்குக் காரணமாகும்.

காலத்துக்கு காலம் அரசியல் தலைவர்களால் உட்செலுத்தப்படும் தேசியவாத உணர்வுகளுடன் கலந்த இந்த மனப் போக்கு கொண்டிருக்கும், நீடித்து நிற்கும் வலுவானது, எந்த ஆட்சியாளரும் புறமொதுக்க முடியாததாக இருக்கிறது. இந்த தரப்பினரிடையேயும் குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அடிப்படை விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசு கவனம் செலுத்தவில்லை என்று உணரும் பலர் இருக்கிறார்கள்.

இந்த விவகாரங்கள், தமிழர்களுடைய அடிப்படை மனத்தாங்கல்கள், சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் அதேவேளை, நாட்டில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதிலுள்ள கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள், சுதந்திரமான ஊடகத்துறை உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்களை மறுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டவையாக இருக்கின்றன.

சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட கடுமையான மீறல்களாக இருக்கக்கூடிய, ஐந்து அடிப்படை வகைகளை நிபுணர் குழு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

பரந்ததொரு அடிப்படையில், குற்றங்களாக இருக்கக்கூடிய இவை, பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

01. சூனியப் பிரதேசத்தின்மீது, பல்குழல் ஏவுகணை செலுத்திகள், மற்றும் ஆட்டிலறிகளைப் பயன்படுத்தி, பரவலானதும் கனசெறிவானதுமான எறிகணை வீச்சுகளை மேற்கொண்டதன் மூலம் குடிசார் மக்களைக் கொன்றமை.

02. முன்னணி நிலைகளுக்கு அண்மையாக இருந்த மருத்துவமனைகள் மற்றும் மனிதநேய கட்டமைப்புகளுடைய அமைவிடங்கள் அரசுக்குத் தெரிந்திருந்தும், அவற்றின்மீது திட்டமிட்ட ரீதியிலான எறிகணை வீச்சை மேற்கொண்டமை.

03. முரண்பாட்டு வலயங்களில் இருந்தவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற மனிதநேய உதவிகள் கிட்டாமல் செய்தமை.

04. மோதல் வலயங்களில் இருந்த போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் தப்பிப் பிழைத்தவர்களுக்கு அடிப்படை வசதிகளை கிடைக்கவொட்டாமல் செய்தமை, துன்பங்களை விளைவித்தமை, அவர்களை மூடப்பட்ட முகாம்களில் தடுத்து வைத்தமை, மற்றும் வெளிப்படையான தன்மையோ அல்லது வெளியார் கண்காணிப்போ இல்லாமல் புலிச்சந்தேக நபர்களைப் பிரித்தெடுத்தமை.

05. ஊடகத் துறையினரையும் விமர்சகர்களையும் பயமுறுத்தியமை, அவர்களைக் கடத்த வெள்ளை வான்களைப் பயன்படுத்தியமை.

இந்த நிபுணர் குழு அறிக்கையானது, இதே காலப்பகுதியில், கடுமையான குற்றங்களாக இருக்கக்கூடிய 6 வகைக் குற்றங்களைப் புலிகளும் புரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

01. குடிசார் மக்களைப் பணயக் கைதிகளாகப் பயன்படுத்தியமை, மோதல் வலயங்களில் அவர்களை மனிதத் தடுப்பரண்களாகப் பயன்படுத்தியமை, இந்தப் பகுதிகளை விட்டு அவர்கள் வெளியேறுவதைத் தடுத்தமை, அவர்களைப் போரில் ஈடுபடுத்திப் பலி கொடுத்தமை.

02. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பியோடி, முரண்பாட்டு வலயங்களிலிருந்து வெளியேற முயன்றவர்களை, திட்டமிட்ட ரீதியில் கொலை செய்தது.

03. சூனியப் பிரதேசத்திலிருந்த, உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களுக்கு அண்மையாக அல்லது அவர்களுக்கு நடுவே ஆட்டிலறிகளை வைத்து இயக்கியது அல்லது படையப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தியது. எதிர்த்தாக்குதலில் பாதிக்கப்படுபவர்களாக, குடிசார்பினரை இது ஆக்கிவிட்டது.

04. சிறுவர்களை வலிந்த ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தியது, போரின் இறுதிக் கட்டத்தில், படையச் சூழ்நிலைகள் நம்பிக்கை தராதவையாக இருந்த போதிலும்,சிறுவர்கள் உள்ளிட்ட, அனைத்து வயதுகளையும் சேர்ந்த மக்களை, முனைப்பாக்கப்பட்ட ஆட்சேர்ப்புக்கு உட்படத்தியது.

05. புலிகளின் முன்னணிப் பாதுகாப்பு நிலைகளில், காப்பகழிகள் மற்றும் ஏனைய நிலைகளை அகழ்வதற்கு, குடிசார்பினரை வலிந்து ஈடுபடுத்தியமை மற்றும் அவர்களை எறிகணைத் தாக்குதல் ஆபத்துகளுக்கு உட்படுத்தியமை.

06. 2009 பெப்ரவரி 09ம் திகதி, முல்லைத்தீவிலிருந்த புலிகளை வேறுபடுத்தும் நிலையத்தின்மீது நடத்திய தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்டதாக, மோதல் வலயங்களுக்கு வெளியே தற்கொலைத்தாக்குதல்கள் மூலம் குடிசார்பினரைக் கொல்லும் நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்தமை.

நிபுணர் குழு கண்டுபிடித்தவை எவையும் புதியவை அல்ல. இதே குற்றச்சாட்டுகள், 2009 பெப்ரவரியில் போர் இறுதிக் கட்டத்தினுள் பிரவேசித்த காலப் பகுதியில் இருந்தே, சர்வதேச முகவரமைப்புகள், ஊடகங்கள் மற்றும் ஏனைய அரசாங்கங்களின் பலவேறு அறிக்கைகளில் பல்வேறு வடிவங்களில் கலந்து இருந்தவைதான்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் சில, முன்னரும், அதாவது, 2002ன் அமைதிப் பேச்சு வருடங்களிலிருந்தே எழுப்பப்பட்டு வருபவைதான்.

இவற்றுள் பலவும் ஊடகத் துறையினரால் மட்டுமல்லாது, பெயர் பெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களாலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருப்பதோடு, இராசதந்திர சமூகத்தினரும் காலத்துக்குக் காலம், சிறிலங்கா அரசின் கவனத்தை, இவற்றின்மீது ஈர்த்தும் வந்திருக்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே, சிறிலங்கா அரசானது, இக்குற்றச்சாட்டுகளை, சர்வதேச சதியின் ஒரு அங்கம் என்று கூறி, அவற்றை அலட்சியப்படுத்த முயற்சி செய்து வந்திருக்கிறது. நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியான, சர்வதேச தூண்டுதல்களை, முறுமுறுத்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட விடயங்களில்கூட, வெளிப்படையான தன்மை இல்லாதிருந்தது. விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுக்களின், நீதியானதும் சுயாதீனமானதுமான செயற்பாடுகளை முறியடிக்கும் விதத்திலான, மறைமுகமான அரசியல் மற்றும் அதிகார வர்க்க ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

உதாரணமாக, 2006 ஜனவரியில், திருமலையில், எந்தக் காரணமுமில்லாமல் 05 இளைஞர்கள் கொல்லப்பட்டது, மற்றும் 2006 ஓகஸ்ரில், மூதூரில் வைத்து, 17 மனிதநேயப் பணியாளர்கள் கொல்லப்பட்டது ஆகியவை தொடர்பாக நடந்த விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

இச் சம்பவங்கள் தொடர்பாகக் கண்டறியப்பட்ட உண்மைகள் பகிரங்கப் படுத்தப்படவில்லை. இந்த வகையான மனப் போக்கானது, அரசு முழுமையான யுத்தத்தில் இறங்கிய பொழுது, ஆளும் தரப்பினரை தண்டனைப் பயமில்லாதவர்களாக ஆக்கும் கலாசாரமொன்றை உருவாக்கி விட்டது. எனவே இந்த வகையான குற்றச்சாட்டுகள் குவிந்து வந்ததோடு, போருக்கு முன்னதாக அரசுக்கு இருந்த சிறிய அளவு நம்பகத் தன்மையையும் இல்லாதொழித்து விட்டது.

ஜனாதிபதி ராஜபக்சவினுடைய நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட படைய நடவடிக்கைகள், ஜெனரல் சரத் பொன்சேகாவினால் திறமையாக நிறைவேற்றப்பட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மக்களின் மனங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த புலிப் பயங்கரவாதத்தை முடிவு கட்டியபொழுது, பதில்கூற அரசுக்கு இருக்கும் கடப்பாடு இல்லாமலிருப்பது மறக்கப்பட்டு விட்டது.

புலிகள் மீதான வெற்றியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த போது, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐரோப்பிய யூனியன் அரசுகள் மற்றும் ஏனைய நாடுகளிடமிருந்து, முறையான விசாரணைகளை மேற்கொள்ளும்படி மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டிருந்த அழைப்புகளை பூசிமெழுகுவது, அரசுக்கு இலகுவானதாக இருந்தது.

அரசினுடைய நடவடிக்கைகள் குறித்து பதில் கூறவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்க வேண்டுமென்று கோரிய எல்லோரையும் துரோகிகள் என்றோ அல்லது கடுமையான முயற்சியின் பேரில், பெற்ற வெற்றிக் கனியை சிறிலங்காவிற்கு மறுக்கும் சர்வதேச சதியின் கூட்டாளி என்றோ அழைப்பது, அரசியல் ரீதியாக வசதியானதாக இருந்தது. இவ்வாறான விசமத்தனமான தன்மைகள், ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபின், அவரையும் விட்டுவைக்கவில்லை.

பதில் கூறும் கடப்பாடு தொடர்பான சர்வதேச வற்புறுத்தல்களுக்கு, சிறிலங்கா அரசு காட்டிய பதில்வினைகள், பரந்த அடிப்படையிலே, மூன்று வகைகளுள் அடங்குகின்றன. போரின் இறுதிக் கட்டங்களை நிகழ்த்தியபொழுது எற்பட்டிருக்கக்கூடிய பிறழ்வுகள் குறித்த முழுமையான மறுப்பு, துருப்புகள் மேற்கொண்டிருக்கக்கூடிய எந்த செயற்பாடும் புலிப் பயங்கரவாதத்தை ஒழிப்பதோடு தொடர்பு பட்டதென்ற தவறான வாதத்தின் மூலமான நியாயப்படுத்தல்கள், வேறு பல நாடுகள் அவற்றுக்கெதிரான இதே மாதிரியான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கொண்டிருப்பதனால், தனது செயற்பாடுகள் குறித்து, ஐநா மற்றும் சர்வதேச சமூகத்துக்கு பதில் சொல்லும் கடப்பாட்டை மறுத்தல் ஆகியவையே அவையாகும்

ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியிலே, சிறிலங்காவின் மனப்போக்குகள் உறைந்து போயிருந்தன. அதனுடைய பதில்வினைகளும் மந்தமானவையாக அமைந்தன. ஐநா நிபுணர் குழுவைப் பொறுத்தவரை, அதனது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பான அரசினுடைய யோசனைகள், முடிந்து போய் விட்டதாகவே தோன்றுகிறது.

வெளியுறவு அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இந்த அறிக்கையின் குணாதிசயங்களாக அமைந்துள்ள, 'சில அடிப்படைக் குறைபாடுகள், உள்ளார்ந்த தப்பெண்ணங்கள், மற்றும் வன்மமான உள்நோக்கங்களை'ச் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த சில காலங்களாகவே ஒன்றுதிரண்டு வந்துள்ள குற்றச்சாட்டுகளை, சிறிலங்கா கையாண்ட விதம் குறித்து விவரிப்பதற்கும் மேற்படி மூன்று சொற்தொடர்களையே பயன்படுத்த முடியும்.

அரசு மேற்கொண்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அங்கீகரிக்க அறிக்கை தவறிவிட்டதென அவர் கூறினார். ஆனால் இந்த ஐநா குழுவானது, குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக மட்டும், செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை கூறுவதற்காகவே அமைக்கப்பட்டது.

நிபுணர் குழுவினால் எட்டப்பட்ட முடிவுகளின் சட்டரீதியான அடிப்படை குறித்து அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த வகையிலான வாதத்தினுடைய பெறுமானம் எவ்வாறிருந்தாலும், அடிப்படையான பிரச்சினை என்னவென்றால், இரண்டு தரப்பினராலும் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, சிறிலங்கா என்ன செய்கிறது? என்பதுதான். அது தன்னுடைய தொடரும்-நடவடிக்கைளை மேம்படுத்துமா? அப்படி இல்லையாயின் அது என்ன செய்ய உத்தேசிக்கிறது?

ஐநா அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டதானது, ஆக்கபூர்வமான உந்துவிசையைத் தடை செய்து, வேகம் குறைக்கலாம் என்றும், 'நாட்டின் நிலைபேற்றுத் தன்மையைக் குலைக்க' விரும்பும் சக்திகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஊட்டமளிக்கும் அதே வேளை, பிளவுகளையும் உருவாக்கி விடுமென்றும் பேராசிரியர் பீரிஸ் கருதுகிறார்.

நாடுகளினுடைய வரலாறுகளிலே, காலம் என்பது, பெறுமதி மிக்கதும் இழப்பீடு செய்யமுடியாததுமான வளமூலமாக இருக்கிறது. இந்த விடயம் தொடர்பான பின்புல இராஜதந்திரத்துக்கான காலம் போய்விட்டது. போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, என்ன செய்வது என்று ஆலோசனை செய்வதற்கு சிறிலங்காவுக்கு இரண்டு வருடங்கள் இருந்தன. இப்போது போர் இல்லை. வெளிப்படையான தன்மைகளுக்கான காலம் வந்துள்ளது.

இது செயற்பாட்டுக்கான நேரம். தேவைப்படும் தொடரும்-நடவடிக்கைகளில், கற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது ஒரு இடைத்தங்கல் வீடுதான் என்பதை நேர்மையான ஒரு ஆன்ம ஆய்வு சொல்லும். இவ் விடயத்தில் தொடர்புபட்டிருக்கும் எந்தத் தரப்பையும் அது திருப்தி செய்யாது என்று நான் எழுதியிருக்கிறேன். (சிறிலங்கா: கற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் கற்றுக்கொள்ளப்படாத பாடங்கள்- தரவேற்றம் இல.198 http://www. southasiananalysis. org/notes6/note 585 html)

ஐநா நிபுணர் குழு அறிக்கை குறித்து, அளவுக்கு அதிகமான பதில் வினை காட்டுவதால் சிறிலங்காவுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அமெரிக்க தூதுவர் புட்டேனிஸ் (விக்கிலீக்ஸில்) கூறியது போல், எந்த நாடும் அதனது வெற்றி பெற்ற ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது. அதேவேளை தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு நிர்ப்பந்திக்கும் வகையிலான சட்டங்கள் அல்லது போரின்போது நிலவிய சூழ்நிலைகளைக் காப்பாகக் கொண்டு, போர்க்குற்றங்களை அல்லது முரட்டுத்தனமான மனித உரிமை மீறல்களை சிறிலங்கா கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. இது வரை நாட்டுக்கு போக்குக் காட்டிவந்த பொதுவான தேசிய அடையாளத்தை கட்டியெழுப்பும் பெரும் பணியும் அதற்கு இருக்கிறது.

போரின் பின்னான சில அடிப்படை விவகாரங்கள் தொடர்பாக போதுமானதும் வேகமானதுமான தொடரும்-நடவடிக்கைகளை எடுக்க சிறிலங்கா தவறி விட்டது குறித்து, ஐநா நிபுணர் குழு அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பிரயோகங்களை மறந்துவிடக்கூடாது. இவற்றை கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆற்றிய உரைகளில் மூன்று பிரசித்தி பெற்ற பிரமுகர்கள் மிக அற்புதமாகத் திரட்டிக் கூறியுள்ளார்கள். பின்வரும் பந்திகளில் அவர்களுடைய வார்த்தைகளைத் தருகிறேன்.

நாட்டினுடைய சட்ட அமைப்பாலும் அரசியல் சட்டத்தினாலும் தான் பாதுகாக்கப்படுவோம் என்ற தன்னம்பிக்கையும் விசுவாசமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும். இதில் நாம் நீண்டதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இதனைச் சாதிப்பதற்கு சில அத்தியாவசியமான முன்நிபந்தனைகள் இருக்கின்றன.

1.அதிகாரம் அல்லது ஆட்சிப்பீடத்தினால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கக் கூடியதும் அவர்களது உரிமைகளை மறுத்தல் அல்லது சீர்குலைத்தலுக்கு எதிரான உத்தரவாதமளிப்பதுமான ஒரு அரசியல் யாப்பு

2. தகவல் சுதந்திரம் மற்றும் அரசினுடைய முழுமையான வெளிப்படைத் தன்மை' நீதியரசர் சீ.ஜீ.வீரமந்திரி, உச்ச நீதிமன்ற நீதியரசர் 1967-72, சர்வதேச நீதிமன்ற நீதியரசர் (1991-2000),

3. தமிழர்கள் பாரிய துன்பங்களுக்கு உட்பட்டுள்ளார்கள், உட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டவேண்டும்… … 1956இலிருந்து நாங்கள் விடாப்பிடியாக தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சங்களைக் காட்டி வந்திருக்கிறோம்… … இப்போது நான் உங்களுக்கு மிகமிகத் துக்ககரமான நிலைமையை, குறிப்பாக, மோசமானதும் அபாயகரமானதுமான நிலைமையைப் பற்றிச் சொல்ல வேண்டும். எமது சிறைகளிலே 2000க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இருக்கிறார்கள். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாகும். வெறுமனே கைது செய்யப்பட்டு பல வருடங்களாக குற்றம் சுமத்தப்படாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.' (கே.கொடகே, முன்னாள் சிறிலங்கா ராஜதந்திரி)

4. பலவருடங்களாக தேசிய வளங்களை சமமற்ற அளவில் ஒதுக்கீடு செய்தல், அதன் விளைவாக பிராந்திய பொருண்மிய அபிவிருத்தி, உட்கட்டுமான அபிவிருத்தி, பொதுச் சேவைகளை வழங்குதல் முதலியவற்றில் ஏற்பட்ட சமமின்மையானது, அதிருப்தி மற்றும் மாயை விலகுதலுக்கான விதைகளை விதைத்து, முரண்பாட்டுக்கும், வடக்கு தெற்கிலான கிளர்ச்சிகளுக்கும் வேறான நிர்வாகத்தை பெறும் நோக்கிலான போராட்டத்துக்கும் வழிவகுத்து விட்டது.' சந்திரா ஜயரத்ன, இனரீதியான கற்கைகளுக்கான சர்வதேச மையத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் மற்றும் இலங்கை வர்த்தகசங்க தலைவர்,

மேற்குறித்த அம்சங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட மிகச் சில நடவடிக்கைகள், மெதுவானவையும் நேரத்தை விழுங்குபவையாயும் இருந்தன. அவை அதிகார வர்க்க சேற்றில் மூழ்கியவையாக இருந்தன.

இந்தியா நிர்மாணிக்க முன் வந்த 100,000 வீடுகளை அமைப்பதில் முன்னேற்றமில்லாமை இதற்கு ஒரு உதாரணமாகும்.

எனவே மட்டுப்படுத்தப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஐநா நிபுணர்குழு அறிக்கை குறித்து எரிச்சல் கொள்வதற்குப் பதிலாக சிறிலங்கா தனது நடவடிக்கைகளை சீர்செய்து கொள்வது நல்லது.

இதற்கு வேறு மாற்றீடுகள் இல்லை. நாட்டைக் கட்டி எழுப்புதல் என்ற பரந்துபட்ட நலனுக்கு உதவுவதாக அது இருக்கும். அப்படி செய்தால் சர்வதேச மேடைகளிலே நற்பெயர் புள்ளிகளை பெறவேண்டிய தேவை எழாது.

http://www.tamilwin.com/view.php?202IBT30eZjQ64ebiGpXcbdF92Oddc8292bc41pG2e43oQj3023PLm32


--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment